வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரராக சிவன்


 

கணவன் மனைவி ஒற்றுமை குழந்தை பாக்கியம் அருளும் வாசுதேவநல்லூர் சிவன்


தல வரலாறு: 


பிருங்கி மகரிஷி, சிவம் வேறு, சக்தி வேறு என்ற எண்ணத்தில் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். இது கண்ட பார்வதிதேவி சிவனிடம், "நாம் இருவரும் ஒன்றே என்ற உண்மையை முனிவருக்கு உணர்த்துங்கள்' என்றாள். ஆனால், சிவன் அவளது வேண்டுதலை ஏற்கவில்லை. வருத்தமடைந்த பார்வதி, சிவனைப் பிரிந்து பூலோகம் வந்தாள். ஒரு புளியமரத்தின் அடியில் தவமிருந்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தன் இடதுபாகத்தில் அவளை ஏற்று அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். 


புளிய மரங்கள் நிறைந்த வனத்தில் சிவன் காட்சி தருவதால், "சிந்தாமணிநாதர்' என்றும் அழைக்கப்படுகிறார். புளிய மரத்திற்கு "சிந்தை மரம்' என்றும் பெயர் உண்டு.


இத்தலத்தின் விருட்சமும் புளியமரம் ஆகும். இம்மரத்தின் பழங்கள் இனிப்பு, புளிப்பு என இரட்டைச் சுவையுடன் இருப்பது சிறப்பம்சம். 


இந்த தலம் வாசுதேவநல்லூர் என அழைக்கப்படுகிறது. இப்பகுதியை சிவபக்தனான ரவிவர்மன் ஆண்டு வந்தான். இவனது மகன் குலசேகரன் தீராத நோயால் அவதிப்பட்டான். மகன் குணமடைய சிவனை வேண்டினான் மன்னன். 


ஒருநாள் அவனைச் சந்தித்த சிவனடியார் ஒருவர், இத்தலத்து சிவனிடம் வேண்ட நோய் நீங்கும் என்றார். அதன்படி மன்னன் இங்கு வந்து வணங்க, மகனின் நோய் குணமானது. பின்பு மன்னன் பெரிய அளவில் கோயில் கட்டினான். அர்த்தநாரீஸ்வரருக்கு சிலை வடித்து மூலஸ்தானம் அமைத்தான்.


குழந்தை வரத்திற்கு வேண்டுதல்:


புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள நதியில் நீராடி அம்பிகையை வழிபட கரு உண்டாகும் என்பது நம்பிக்கை. எனவே இந்த நதி, "கருப்பை ஆறு'  (கருப்பாநதி) என்று அழைக்கப்படுகிறது. 


சுவாமிக்கு ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக, சித்திரை மாத பிறப்பன்று காலையில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. பிரிந்திருக்கும் தம்பதியர் இங்கு வேண்டிக்கொள்ள மீண்டும் இணைவர் என்பது நம்பிக்கை.


சிறப்பம்சம்: 


சுவாமி பகுதி காலில் தண்டம், சதங்கையும், அம்பாள் பகுதி காலில் கொலுசும் இருக்கிறது. சுவாமி பாகத்திற்கு வேட்டியும், அம்பாள் பாகத்திற்கு சேலையும் அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது. 


அம்பாள் பகுதியை "இடபாகவல்லி' என்கின்றனர்.


இங்குள்ள சனீஸ்வரரின் கையில் கிளி இருக்கிறது. நம்மை சோதிக்க வேண்டாம் என சனீஸ்வரரிடம் வேண்டினால், அந்தக்கிளி அதைக் கேட்டு, திரும்ப திரும்ப சனீஸ்வரரிடம் ஞாபகப்படுத்தும் என்பது ஐதீகம்.


அமைவிடம் / செல்லும்வழி:


திருநெல்வேலி மாநகரில் இருந்து சுமார் 78 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வாசுதேவநல்லூர். திருநெல்வேலியில் இருந்து தென்காசி சென்று அங்கிருந்து மதுரை செல்லும் பேருந்துகள் மற்றும் திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் சென்று அங்கிருந்து வாசுதேவநல்லூர் செல்லும் நகரப்பேருந்துகள் மூலமும் வாசுதேவநல்லூர் சென்றடையலாம்

Comments

Popular posts from this blog

அருள்மிகு ஆதிசொக்கநாதர் திருக்கோயில், சிம்மக்கல், மதுரை

சிவபெருமான் பற்றிய சிறப்பு செய்திகள்