ஆஞ்சநேயர் சூட்சும வடிவில் வீணை இசைக்கும் சிவாலயம்!

 

ஆஞ்சநேயர் சூட்சும வடிவில் வீணை இசைக்கும் சிவாலயம்!
சென்னை பூந்தமல்லி - பேரம்பாக்கம் சாலையில், பூந்தமல்லியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில். வீணை வாசிக்கும் ஆஞ்சநேயர், எலும்புப் பிணிகள் தீர்க்கும் பிரதோஷ தரிசனம், மூல நட்சத்திரக் காரர்கள் வழிபடவேண்டிய ஆலயம் என்று இந்தத் தலத்துக்கு சிறப்புகள் பல உண்டு.
திருமால் மோகினி அவதாரம் எடுத்து வந்து அசுரர்களை மயக்கி, பாற்கடல் அமிர்தத்தைத் தேவர்களே அருந்தும்படி செய்த கதையை நாம் அறிவோம். இங்ஙனம் வஞ்சகமாக அசுரர்களை ஏமாற்றியதால், மோகினி வடிவத்தில் இருந்து தன் சுயவடிவுக்கு மாற மகாவிஷ்ணுவால் முடியவில்லை.
எனவே, அவர் இத்தலத்துக்கு வந்து, சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு, அதன் பயனாக சுய வடிவம் பெற்றார். `மால் பேடு' என்றும் (மால் திருமால்; பேடு பெண்), பெண் வடிவில் திருமால் வழிபட்டு, மெய் உருக் கொண்டதால் `மெய்ப்பேடு' என்றும் அழைக்கப்பெற்ற இத்தலம், தற்போது `மப்பேடு' என்று அழைக்கப்படுகிறது.
திருவாலங்காட்டில் எம்பெருமான் ஈசன் திருநடனம் புரிந்த போது, அவரின் நந்தி கணங்களில் ஒருவரான சிங்கி, சிவனாரின் நடனத்துக்கு ஏற்ப, மிருதங்கத்தை லயிப்புடன் வாசித்தார். அதன் காரணமாக, அவரால் ஈசனின் திருநடனத்தை தரிசிக்க இயல வில்லை. இந்தக் குறை தீர, மப்பேடு திருத் தலத்தில் சிங்கிக்குத் திருநடனக் காட்சியைக் காட்டினாராம் ஸ்வாமி. ஆகவே இங்கே இறைவன் ‘சிங்கீஸ்வரர்’ என்னும் திருப்பெயர் ஏற்றார் என்கிறது தலபுராணம். அம்பிகையின் திருநாமம் புஷ்பகுஜாம்பாள்.
ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் ஒரு மண்டபம் அமைந்திருக்கிறது. அந்த மண்டபத்துக்கு அருகில் ஒரு சிறிய சந்நிதியில் தொன்மை வாய்ந்த லிங்கத் திருமேனியராக அருள்மிகு வீரபாலீஸ்வரர் அருள்கிறார். இவரின் சந்நிதியைப் பார்த்தபடி அமைந்திருக் கும் ஒரு சிறிய மாடத்தில் வீணை வாசிக்கும் கோலத்தில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்.
சீதையைத் தேடிக்கொண்டு ஆஞ்சநேயர் இலங்கைக்குச் சென்றபோது வழி தெரியா மல் தவித்ததாகவும், பின்னர் இந்தத் தலத் தில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு வீரபாலீஸ்வரரை, வீணையில் அமிர்தவர்ஷிணி ராகம் இசைத்து வழிபட்டதாகவும், இறைவனின் அருளால் இலங்கைக்குச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இன்றைக்கும் சந்தியா காலத்தில் ஆஞ்சநேயர் சூட்சும வடிவில் வந்து வீணையில் அமிர்தவர்ஷிணி ராகம் இசைப்பதாக ஐதீகம். இசைத்துறையில் பெயரும் புகழும் பெற விரும்பும் அன்பர்கள் இங்கு வந்து வீரபாலீஸ்வரர் சந்நிதிக்கு முன்பு அமர்ந்து பயிற்சி செய்தால், அவர்களுடைய விருப்பம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
அதேபோல், கொடிமரத்துக்கு அருகில் அமைந்திருக்கும் நவ வியாகரணக் கல்லின் மேல் இருந்தபடி, நந்தியையும் சிவபெருமானையும் பிரதோஷக் காலத்தில் வழிபட்டால், எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்பது ஐதிகம். கார்த்திகை சோமவாரம், பிரதோஷம், ரேவதி நட்சத்திரம் போன்ற தினங்களில் இப்படி தரிசிப்பது கூடுதல் சிறப்பு என்கிறார்கள் பக்தர்கள்.
அருள்மிகு சிங்கீஸ்வரரின் சந்நிதிக்குள் செல்லும்போது நமக்கு நேரெதிரில் நடராஜர் சந்நிதி அமைந்திருக்கிறது. நடராஜர் சந்நிதிக்கு வலப்புறத்தில் கிழக்குப் பார்த்து காட்சி தரும் சிங்கீஸ்வரர் சந்நிதி அமைந்திருக்கிறது.
அருள்மிகு சிங்கீஸ்வரர் மூல நட்சத்திரத்தில் தோன்றியவர் என்பதால், மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய பரிகாரக் கோயிலாக விளங்குகிறது. மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் ஜாதகத்தில் உள்ள சகலவிதமான தோஷங்கள் நீங்கவும், மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையவும் தொடர்ந்து ஐந்து மூல நட்சத்திர நாள்களில் இந்த ஆலயத்துக்கு வந்து, சிங்கீஸ்வரர் சந்நிதியில் ஐந்து நெய்விளக்குகள் ஏற்றி அர்ச்ச கரிடம் கொடுத்து சுவாமிக்கு அர்ச்சனை செய்துகொள்ளவேண்டும். இப்படிச் செய்தால், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.
அற்புதமான இந்த ஆலயத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வரும் ஜனவரி-18 புதன் கிழமை அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. பக்தர்கள் அனைவரும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டு சிவனருள் பெற்று வரலாம்.


Comments

Popular posts from this blog

அருள்மிகு ஆதிசொக்கநாதர் திருக்கோயில், சிம்மக்கல், மதுரை

சிவபெருமான் பற்றிய சிறப்பு செய்திகள்